Tuesday, January 29, 2008

இரத்த ருசியும் கரப்பான் பூச்சியும்

குளிரூட்டப்பட்ட
அலுமினியத் தடுப்பறையில்
கருநிறச் சல்லாக் காலுறையணிந்த
மாடலிங் பெண் நேற்றைய பாடலொன்றை
முணுமுணுக்கிறாள்
நகரத்தின் மேல் தாழப்பறந்து போகும்
விமானத்தின் அதிர்வொலிகள்அடிவயிற்றில் சரசரக்க
அவள இரவு உணவு தொலைதூர
விடுதியில் வயிறு பிளக்கப்பட்ட
ஒரு பாறை மீனாக இருக்கலாம்
அவள் புன்னகைக்கிறாள்
தன் படுக்கயறைக் குடுவையில் வளரும்
காதலின் பரிசான ஒரு குட்டித் தங்கமீனை
நேற்று மல்லாந்த தன் நிர்வாண
உடலின் மேல் துடிக்கவிட்டு சாகடித்து இருக்கிறாள்
அவள் இறங்கிப் போகலாம்
நகரும் படிகளில் அல்ல லிஃப்டில்
கனத்த அலுவலகச் சுவர்கள்
ஒளிரும் செயற்கை பூந்தொட்டிகள்
கைப்பயில் வைத்திருக்கும் பாம்பின் கால்கள்
நகரச் சாலையில் விழ வண்டு போல
ஒளிர்ந்து வீடு பறக்கிறது அவனது வாகனம்
விளக்குகள் அணைக்கப்பட்டு
மெல்லிய வெப்பம் சூழ்ந்து கொண்டிருக்கும்
அலுவலக கழிவறையின்
நீலநிறப் பீங்கான் மீது
ஈரம் காயாத இரத்தத்தை
ருசித்துக் கொண்டிருக்கின்றன கரப்பான் பூச்சிகள்.

ய‌வ‌னிகா ஸ்ரீராம்
.

முத்தங்களின் இரகசியங்கள்

என்னை முத்தமிடுகையில்
உன் பிரச்சினை
என்னவென்பது
எப்பொழும் புரியவில்லை.

உனக்கான
முத்தத்தில்
புதைந்திருக்கும் பிரியங்களின்
இரகசியங்களை
நீ அறிந்து கொள்ளமுயல்வதேயில்லை.

என் இதழ்கள்
உன்னைத் தீண்டுகையில்
என் தந்தை
என் சகோதரன்
என் நண்பன் ஆகியோரின்
அன்பையும்
உன்னிடமே சேர்க்கிறேன்.

இதழ்களால்
என் மீது செலுத்தும்
உனதன்பு
வெறும் முயங்குதலில்
முடிந்து போகின்றபொழுது
எஞ்சுகின்ற தனிமையில்
புரிந்து கொள்வதற்குஎன்னிடம்
எதுவும் இல்லை எப்பொழுதும்

சக்தி ஜோதி